பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்!

0
447

14.10.2017 அன்று நடைபெற்ற தமிழீழப் பெண்களின் எழுச்சி நிகழ்வும்,இரண்டாம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் நினைவு நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடை பெற்றது .மூத்த பெண்மணிகளுக்கான சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டதோடு,பெண்களை தலமைத்துவமாக கொண்ட சமூகசேவையாளர் கௌரவிப்பு நிகழ்வும் சிறந்த முறையில் நடைபெற்றது . கருத்தாய்வுநிகழ்வில் தாயகத்தில் பெண்களின் அவல நிலை குறித்தும்.அதனை தீர்க்கும் நிலைப்பாடு குறித்தும் பிரதானமாக ஆய்வு செய்யப்பட்டது.
அத்துடன் எழுச்சியூட்டும் பல கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் உலகத்தமிழ் பெண்கள் சார்பில் பிரதான அறிக்கை வாசிக்கப்பட்டது .

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்..

தமிழீழ தேசத்தின் மாபெரும் சக்தியாக, எழுச்சி பெற்ற வீரத்தமிழ்ப் பெண்ணினத்தின் குறியீடாக, வரலாற்றுப் பாதையில் ஆழத் தடம்பதித்தபடி சொந்த தேசத்திலும் , உலகெங்கும் பரந்து வாழ்ந்தபடியும் தமிழீழப்பெண்கள் நாம் தலைநிமிர்ந்து நிற்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் பெரும்வீச்சான சக்தியாகவும், ஆண்களுக்கு நிகரான அனைத்து வல்லமைகளோடும் தேசியத்தலைரின் சீரிய சிந்தனைத் தோன்றலின் செயல்வடிவமாய் தமிழீழப்பெண்கள் நாம் எழுச்சி பெற்று நிற்கின்றோம்.

“பெண்கள் விழிப்புற்று எழுச்சி கொண்டு தமது சொந்த விடுதலைக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் போராட முன்வரும்போதுதான் அந்தப்போராட்டம் முழுவடிவத்தைப் பெறும்” எனும் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு மகுடம் வைத்தாற்போல் காலம் எம்மை மீண்டும் இருகைகளை நீட்டி மாபெரும் ஒன்று திரண்ட சக்தியாய் வரவேற்றிருக்கின்றது.

பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரிய விழுமியங்கள் எனும் இயலாமைப் போர்வைகளுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணடிமைத் தடைகளைத் தகர்ததெறிந்து, தன்மான உணர்வுகளோடும் தனித்துவங்களோடும் நாம் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றோமெனில், அதற்காக நடந்தேறிய ஈடிணையில்லாத அளப்பரிய தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் எம் தேசியத்தலைமையின் நேரிய வழிகாட்டலுமே காரணங்களாகும்.

பெண்ணென்றால் பரிதாபப்படுவதும், பரிகாசம் செய்வதும் பழகிப்போன ஒன்றாக, பழமைவாதத்துள் புரையோடிக்கிடந்த எமது சமுதாயத்தின் மறுமலர்ச்சியாய்ப் புதிய பிறப்பெடுத்த பெண்களின் புரட்சி வடிவமாக, பாரதி எனும் கவி சொன்ன புதுமைப் பெண்களாய் எம் தமிழீழப் பெண்கள் திகழ்ந்தார்கள். குறிப்பாக விடுதலைப்போராட்ட காலத்தில் எம் பெண்கள் களத்திலும், எம் தேசத்தின் அனைத்து நிர்வாகக் கட்டமைப்புகளிலும், முழுமையான ஆளுமை பெற்றவர்களாக ஈடிணையில்லாத சக்தியின் வடிவமாய்த் நிமிர்ந்திருக்கின்றார்கள் . உலகம் வியக்கும் சாதனைகளை சரித்திரமாய்ச் சாதித்துக் காட்டியிருக்கின்றார்கள்.

இத்தகைய பெண்கள் வீறுகொண்டெழுந்த விடுதலைப் பயணத்தில், தமிழீழம் சுமந்த அத்தனை வலிகளையும் தாமும் சுமந்து, தேசத்தின் வெற்றி மகுடங்களை எம் தேசத்தாய்க்குச் சூட்டி மகிழ்ந்து எம் தேசியத் தலைவரின் சூரியப்புதல்விகளாய் வலம் வந்த மாபெரும் வரலாறு எம் கண்முன்னே இன்னமும் விரிந்து கிடக்கின்றது.

இந்த மாபெரும் வரலாற்றில் முதல் வித்தான பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி எனும் பேரொளியின் நினைவு நாளே அனைத்து தமிழீழ பெண்களின் எழுச்சி நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் இடம்பெற்று வருகின்றது.
இத்தகைய எழுச்சி நாளின் மூலமாக தமிழீழப் பெண்கள் மட்டுமன்றி அனைத்து உலகப் பெண்களுமே பெருமை கொள்ளும் நாளாக மகுடம் சூடியிருக்கின்றது.

சாத்வீக வழிநின்ற சரித்திரத்தில் தியாகத்தின் செம்மலாய் அன்னை பூபதியின் வழித்தடங்கள் தமிழீழப்பெண்களுக்கு இன்னுமோர் மாபெரும் அத்தியாயத்தை எழுதிச்சென்றிருக்கின்றது.

போரின் அத்தனை சவால்களையும், வலிகளையும் தம்மிடையே சுமந்து அவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் துணிந்த எம் தேசத்தின் பெண்கள், போரின் முடிவிலே எதிர்கொண்டிருந்த வார்த்தைகளால் விவரிக்கமுடியாத, வலிகளும், துயரங்களும் இன்றளவிலும் சுமந்தபடி வாழ்வது பெரும் வேதனையளிக்கின்றது. எதிரிகளால் வன்கவரப்பட்ட ஒரு தேசத்தின் அத்தனை அவமானங்களையும் அத்தேசத்தின் பெண்ணினம் எவ்வாறு சுமந்திருக்கும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டியதொன்றில்லை. நிர்வாணப்படுத்தப்பட்டு நிர்க்கதியாய் நின்று அவலப்பட்டுத் துடிதுடித்த காயங்கள் இன்னமும் ஆறிப்போகவில்லை.
பெற்றோரை,துணையை, பிள்ளையை என அத்தனை உறவுகளையும் தொலைத்த கண்ணீர் வாழ்வு இன்னமும் மாறிப்போகவில்லை! தொடர்ந்தும் துரத்திவருகின்ற துயரவாழ்விலிருந்து இன்றளவும் மீட்சி கிடைக்கவில்லை.

இத்தகைய துன்பியல் வாழ்விலிருந்தும் மீண்டவர்களாய், மீண்டும் தலை நிமிர்ந்த தமிழீழப் பெண்களாய், தன்மானத் தமிழிச்சியராய் மீண்டும் நாம் எழுச்சி பெறும் காலத்தின் தேவையை உணர்ந்தவர்களாக எம் தலைகளை நிமிர்த்திக்கொள்கின்றோம்!
எம் சொந்த நிலத்திலும் , உலகெலாம் பரந்து வாழுந்தபடியும் எங்கள் நெஞ்சக்கருவறையில் எம் சுதந்திர தேசத்தைச் சுமந்தவர்களாய் வலம் வருகின்றோம். “பெண் விடுதலையே சமூக விடுதலையை முழுமை பெறச்செய்கின்றது. பெண்கள் சுதந்திரமாக,கௌரவமாக சமத்துவமாக வாழ வழி செய்யும் ஒரு மக்கள் சமூகமே உயரிய பண்பாட்டின் உன்னத நிலையை அடைய முடியும்” எனும் எம் தேசியத்தலைவரின் சீரிய எண்ணங்களால் கட்டி வளர்க்கப்பட்டு, எம் தடைகளைத் தகர்தெறிந்து சுதந்திர தமிழீழப் பெண்களாக காலச்சரித்திரத்தில் கண்ணியமாய் எம் சுவடுகள் பதிக்க இந்த மாபெரும் எழுச்சி நாளில் உறுதி பூணுகின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”